திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையம் அருகே கார் திருட்டு
- மர்ம கும்பல் காரை திருட முடிவு செய்து நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாவியை திருடிய நிலையில் காரை திருட முயன்றனர்.
- காரில் இருந்து வந்த அலார சத்தம் கேட்டு உரிமையாளர் கணேஷ் குமார் வெளியே ஓடி வந்ததைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையம் அருகே இவரது வீட்டிற்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனைக்காக நிறுத்தி வைத்திருந்தார்.
அங்கு சில நாட்களாக நோட்டமிட்ட மர்ம கும்பல் காரை திருட முடிவு செய்து நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாவியை திருடிய நிலையில், காரை திருட முயன்றனர். இதற்கிடையே காரில் இருந்து வந்த அலார சத்தம் கேட்டு உரிமையாளர் கணேஷ் குமார் வெளியே ஓடி வந்ததைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
முன்னதாக திருடி பக்கத்து தெருவில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காரில் ஏறி தப்பி சென்றனர். இதனை அடுத்து காரைத் திருடிய மர்ம கும்பலை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.