குன்னூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றம்
- குடியிருப்புகள், பள்ளிவாசல், ஆலயங்கள் உள்ளது.
- மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூர் மவுண்ட் ரோடு பகுதி முக்கியமான சாலை ஆகும். இது மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை. இந்த சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
அந்தப் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட நகராட்சி மார்க்கெட் கடைகள், 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிவாசல், ஆலயங்கள் உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், வியாபாரிகள் தினதோறும் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் குடிபோதையில் நடைபாதையில் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் நடந்து செல்லும் மக்கள் முகத்தை சுளித்து கொண்டு செல்லும் நிலை இருந்து வந்தது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் பல்வேறு விதங்களில், பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
ஆனால் டாஸ்மார்க் கடை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்னூர் தாசில்தாரான சிவக்குமாருக்கு டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர் அதிரடியாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதனால் மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த த.மு.மு.க, ம.ம.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சென்று தாசில்தார் சிவகுமாரை சந்தித்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.