மாணவியிடம் அத்துமீறி அளவெடுத்த டெய்லர்- ஆசிரியை உள்பட 3 பேர் போக்சோவில் கைது
- மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
- பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.
சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.