முகாமில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் வழங்கினார்
- ஒரு வருடத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம்.
- திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களை கொண்ட மிகப்பெரிய சரணாலயம்.
பூதலூர்:
பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வரவேற்புரை ஆற்றினார்.
முகாமில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முகாமில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை ரீதியான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 347 பேருக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது :-
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முகாம் நடைபெற்று வருகிறது.
முகாம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் தோறும் மரங்கள் நடுவதை ஒரு இயக்கமாக தொடங்கி நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு வருட காலத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
நமது கிராமத்தின் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களைக் கொண்ட மிகப்பெரிய சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் அதை சென்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் நேர்காணல் முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் காட்சி அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. முகாமில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்சியா நன்றி கூறினார்.