சேலம் குப்தா நகரில் நாய் கடித்து குதறியதால் இறந்த பசுமாடு
- வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
- நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.
தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.
இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.