1098 போன் செய்து திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி
- சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
- திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தந்தையை இழந்த 16 வயதான சிறுமி அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உறவுக்காரர் ஒருவரை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முடிவு செய்தார். அதை விரும்பாத அந்த சிறுமி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார்.
ஆனால் எவ்வளவோ மறுத்தும் கண்டுகொள்ளாமல் உறவினருடான திருமண வேலைகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் தவித்த அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு பேசி தன் நிலையை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெள்ளகோவில் விரைந்து சென்றனர்.
பின்னர் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது சட்டப்படி வயது வராமல் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதைத்தொடர்ந்து அந்த சிறுமியுடன் குடும்பத்தினரை திருப்பூர் அலுவலகத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.