மகளுடன் தி.மு.க. பிரமுகர் மறியல்
- சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு
- போலீசார் பேச்சுவார்த்தை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மகளுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே தனது மகளை சிகிச்கைக்காக, தியாகராஜன் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.
ஆஸ்பத்திரியில் அவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர், சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை வலி தாங்கமுடியாமல் துடித்தார். டாக்டரிடம் தியாகராஜன் சென்று கேட்டதற்கு, அவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் தனது மகளுடன், அரசு ஆஸ்பத்திரி முன்பு வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து அவர் தனது மகளை அழைத்துக்கொண்டு, வேறு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் டாக்டர்களை கண்டித்து, தி.மு.க பிரமுகர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.