பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது
- பலமுறை போன் செய்தும் எடுக்காததால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காலூர் மதுரா செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி கேயன்,கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்டு கிடந்தார்.
இது குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சாந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் பால்நகரை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
சாந்திக்கும், செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. தற்போது சாந்தி, செந்தில்குமாருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குடி போதையில் செந்தில்குமார் பலமுறை சாந்திக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சென்று, தூங்கிக்கொண்டிருந்த சாந்தியின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார்.
செந்தில்குமார், சாந்திக்கு செல்போன் செய்ததை வைத்து அவரை கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.