ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
- துறையூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 825 கிலோ குட்கா சிக்கியது
- உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
துறையூர்,
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவில் நியமன அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு. இவருக்கு துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் துறையூர் தெப்பக்குள தெருவில் உள்ள பாலாஜி (30) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர்.அங்கு சுமார் 10 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி ரோட்டில் பேன்சி கடை வைத்து நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தம்சிங் (45) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்வதாக கூறினார். பின்னர் உத்தம்சிங் கடைக்கு சென்று அங்கு பணிபுரியும் அசுசிங் (25) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், உத்தம்சிங்கின் ஏற்பாட்டில் தெப்பக்குள தெருவில் உள்ள பரிதாபானு என்பவருக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.இதனையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டதில் அங்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 825 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் துறையூர் போலீசில் புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் போலீசார் உத்தம்சிங், அசுசிங், பாலாஜி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அசுசிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். துறையூர் பகுதியில் ஒரே இடத்தில் 800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.