கோவையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
- லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
- மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை.
கோவை,
தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கோவையிலும் கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் 2,500 லாரிகள் ஓடவில்லை.
இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-
தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்கி வந்தன. ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது 2.50 லட்சம் எண்ணிக்கையிலான லாரிகள் மட்டுமே இயங்குகின்றன.
லாரி தொழில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்ற கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். அதன்படி, மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.