உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் வரலாறு காணாத குளிர்: சளி, காய்ச்சலால் அவதிப்படும் பொதுமக்கள்

Published On 2025-01-11 11:04 IST   |   Update On 2025-01-11 11:04:00 IST
  • பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
  • குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.

ஏற்காடு:

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.

இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.

மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.

Tags:    

Similar News