உள்ளூர் செய்திகள்

11 பவுன் நகையை திருடி உருக்கிய 2 பெண்கள் கைது

Published On 2023-06-19 14:50 IST   |   Update On 2023-06-19 14:50:00 IST
  • செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்
  • ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை மீட்டனர்

வேலூர்:

வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). தனியார் சாக்லேட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் அதேபகுதியை சேர்ந்த உறவினரான ராஜேஸ்வரி (24) என்பவர் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரகாஷின் வீட்டில் இருந்து 11 பவுன் நகை திருட்டு போனது. இதுதொடர்பாக அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் தொடக்கத்தில் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனவே ராஜேஸ்வரி மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டர்கள் காஞ்சனா, தேவபிரகாஷ் ஆகியோர் தலைமையில் முதல் நிலை காவலர்கள் ரஞ்சித்ராஜா, சுதா ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் ராஜேஸ்வரியின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேசியது போலீசாருக்கு தெரியவந்தது.

அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த பழனிமுருகன் என்பவரின் மனைவி சங்கீதா (36) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அங்குள்ள ஒரு வங்கியில் நகை ஒன்றை அடகு வைத்ததை போலீசார் கண்டறிந்தனர்.

அந்த நகை வேலூர் பிரகாஷ் வீட்டில் திருட்டு போன நகையாக இருக்கலாம் என்று கருதி போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் பிரகாஷின் நகை தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதனிடையே நகையை சங்கீதா மீட்டு, அதை உருக்கி உள்ளார்.

போலீசார் சங்கீதாவை பிடித்து கைது செய்தனர். அதில் அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி நகையை திருடி தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

பின்னர் ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றியபோது அவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

வேலூரில் திருடிய நகையை அவர் சங்கீதாவிடம் கொடுத்து அடகு வைத்ததுள்ளார். உருக்கி வைத்துள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை மீட்டுள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News