வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
- தொடர் மழை காரணமாக பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 60), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஞானம்மாள் (55).
தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விஜயன் தனது குடும்பத்தி னருடன் மண்சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் குடியாத்தம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் விஜயன் வீட்டின் மண் சுவர் முழுவதும் மழை நீரில் நனைந்து ஈரமானது.
விஜயன் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். ஞானம்மாள் வீட்டில் உள்ள சுவரின் அருகே பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மண்சுவர் எதிர்பாராத விதமாக ஞானம்மாள் மீது இடிந்து விழுந்தது.
வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சுவரின் இடிபாடுகளில் சிக்கி ஞானம்மாள் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஞானம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தில் குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், சப்-கலெக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.