வீடியோ காலில் பேசி கணவன்-மனைவி தற்கொலை: ஆதரவற்று நிற்கும் பெண் குழந்தைகள்
- கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு.
- வீடியோ காலில் பேசும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தகுறிச்சி பகுதியை சேர்ந்த கவுரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்திஷா (வயது 4) நிதிஷா (வயது 2 ) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார் என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கவுரி அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கவுரி, தனது கணவர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன் தினம் தனது தங்கையிடமும் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனது தந்தையிடமும் வீடியோ காலில் கவுரி பேசியதாக தெரிகிறது. அவர்களிடம் பேசிவிட்டு தனது கணவருடனும் வீடியோ காலில் பேசியுள்ளார்.
கணவரிடம் பேசி முடித்த சில மணி நேரங்களில் வீட்டில் உள்ள ஒரு அறையில் கவுரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த குழந்தைகள் அழுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கவுரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கணவர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர் செல்வம், அங்கு ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கவுரியின் உறவினர்கள் கூறுகையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடக்கும். இதனால் கவுரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். நேற்று என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றும் தெரியவில்லை.
தற்போது இரு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பன்னீர் செல்வத்தின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கவுரியின் தங்கை கார்த்திகா கூறியதாவது:-
எனது அக்காளுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 4 மாதமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று எனது அக்காள் தனது கணவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது அக்காள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளது.
எனது அக்காளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது எதிர் காலத்தை கருதி பன்னீர் செல்வத்தின் சொத்துக்களை சரிபாகமாக பிரித்து கொடுக்க வேண்டும். பன்னீர் செல்வத்தின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டு இருவரது உடல்களையும் ஒரே நாளில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
பன்னீர் செல்வம் உடல் வரும் வரை எனது அக்காள் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படி பிரேத பரிசோதனை செய்தால் உடலை நாங்கள் வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுரியின் தந்தை கொளஞ்சி நாதன் கூறும் போது, மருமகனின் தந்தையோ, உடன் பிறந்தவர்களோ கண்டு கொள்ளவே இல்லை. சேர்ந்து வாழலாம் என தனது மகளை அழைத்து வந்த நிலையில் மகள் கவுரி தற்கொலை செய்து கொண்டார் என அழுது துடித்தார்.