குன்னூரில் பலா பிஞ்சுகளை ருசிக்க முகாமிட்டுள்ள காட்டுயானைகள்
- பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன
- பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
குன்னூர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து, குன்னூர் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளன.
இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இதை சுவைக்க காட்டுயானைகள் படையெடுக்கின்றன. அவை குழுக்களாக பிரிந்து பல்வேறு தோட்ட பகுதியில் உலா வருகின்றனர்.
குறிப்பாக பர்லியார் பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அங்குள்ள மரங்களில் இருந்த பலாப்பிஞ்சுகளை காட்டுயானைகள் ருசித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.