திருக்கார்த்திகையையொட்டி உடுமலையில் மண் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
- மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு என தனியாக மண் உள்ளது.
- சிறிய சுட்டி விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உடுமலை:
திருக்கார்த்திகை விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில் மற்றும் தெருக்களில் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள்.
இந்தநிலையில் திருக்கார்த்திகைக்கு தேவையான மண் விளக்குகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் என உடுமலை சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் பாரம்பரியமாக இதனை செய்து வருகின்றனர். விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பஞ்சலிங்கம் என்பவர் கூறியதாவது:-
கார்த்திகை தீபத்திற்கு ஒரு முக விளக்கு, 2 முக விளக்கு, ஐந்து முக விளக்கு, 10 முக விளக்கு என பல்வேறு விளக்குகளை தயார் செய்கிறோம். மேலும் கொடிக்கம்பத்தில் வைக்கக்கூடிய பெரிய வகை விளக்குகளும் தயார் செய்யப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.
மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு என தனியாக மண் உள்ளது. செம்மண், களிமண், மணல் ஆகியவற்றை முறையாக கலந்து, நீரில் கரைத்து, கற்கள், குப்பைகளை அகற்றி வடிகட்டப்படுகிறது. அதற்குப்பிறகு, பிசைந்து பசை போல் ஆன பிறகு, மண் சக்கரத்தில் இட்டு சுழற்றப்பட்டு விளக்குகளாக மாற்றப்படுகிறது. அதற்கு பிறகு, சூளையில் வைத்து 15 நாட்கள் வரை வேக வைத்து, விளக்குகள் தயார் செய்யப்படுகிறது.
சிறிய சுட்டி விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் தயாரிக்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில் உற்பத்தி செய்யும் விளக்குகள், கோவை, திருப்பூர், திண்டுக்கல், கேரளா, மூணாறு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.