உள்ளூர் செய்திகள்

சசிகுமார்

சிங்கப்பூரில் இருந்து பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்த வாலிபர் வெட்டிக்கொலை - சிவகங்கை வாலிபர் சரண்

Published On 2025-01-23 14:34 IST   |   Update On 2025-01-23 14:34:00 IST
  • கொலையாளி வெற்றிவேல் சிவகங்கை மாவட்டம் கீழ சேவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
  • கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 25). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொங்கல் கொண்டாட சொந்த ஊர் திரும்பினார்.

நேற்று இரவு வீட்டில் இருந்த சசிகுமாரை மர்மநபர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் வடக்கு இளையாத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்( 23 ) என்பவர் மஞ்சு விரட்டு முன் விரோதம் காரணமாக சசிகுமாரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையே கொலையாளி வெற்றிவேல் சிவகங்கை மாவட்டம் கீழ சேவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்திரு திருமயம் போலீசார் சரணடைந்த வெற்றி வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மஞ்சு விரட்டு முன்விரோதத்தில் சசிகுமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? இந்த கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

மஞ்சுவிரட்டு முன் விரோதத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News