மழைக்கால காய்ச்சலை தடுப்பது எப்படி?
- தனது இனத்தைப் பெருக்கி ஒவ்வொருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவி அந்த வைரஸ்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் இது.
- சீசனல் ஜூரங்களில் அரிதிப் பெரும்பான்மை வைரஸ்களால் பரவுபவை.
மழைக்காலம் தொடங்கி தமிழ்நாட்டில் பருவகால காய்ச்சல் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. பொதுவாக வருடத்தின் இந்த மாதங்களில் காய்ச்சல் தொற்றுப் பரவல் நிலை அதிகரிப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே ஆகும்.
சுவாசப்பாதை வழியே பரவும் வைரஸ்களுக்கு இந்த பருவ நிலை மிகவும் தோதானதாக இருப்பதால் இருமல், தும்மல், சளியை வெளியே துப்புவது, சளியை சிந்திய கைகளுடன் பல இடங்களில் தொட்டு வைப்பது என்று ஜாலியாக தனது இனத்தைப் பெருக்கி ஒவ்வொருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவி அந்த வைரஸ்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் இது.
இதை மருத்துவர்கள் "சீசனல் ஜூரம்" என்று குறிப்பிடுவோம். இத்தகைய சீசனல் ஜூரங்களில் அரிதிப் பெரும்பான்மை வைரஸ்களால் பரவுபவை.
காய்ச்சல், மூக்கு அடைப்பு/ ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், உடல் வலி / சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பெரும்பான்மை தொற்றுகள் ஓரிரு நாட்கள் ஓய்வு, முறையான மருத்துவ சிகிச்சை, உணவு முறை எடுத்தால் குணமாகிவிடும்.
எனினும் இந்த காலங்களில் பிரச்சனைக்குரிய வைரஸ்களான பன்றிக் காய்ச்சல் வைரஸ், கொரோனா வைரஸ் என்று பரவி குழந்தைகளுக்கும் முதியவர்களளுக்கும் இதய / சிறுநீரக/ கல்லீரல் நோய்கள் கொண்டவர்களுக்கு ஏற்படும் போது தீவிர நிலையை எட்டக்கூடும்.
இத்தகைய தீவிர நிலையில் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..
- கடுமையான அடங்காத காய்ச்சல்
- மூச்சுத்திணறல்
- நடக்கும் போது தலைசுற்றல்
- மூச்சு ஏங்கி ஏங்கி விடுவது
- அதீத உடல் சோர்வு
- உணவு உண்ண இயலாமை
- பசி அற்றுப்போதல்
- சிறுநீர் அளவில் குறைதல்
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். தீவிர சிகிச்சை தேவை.
மழைக்காலத்தில் இன்னொரு பிரச்சனை கொசு மூலம் பரவும் டெங்கு போன்ற பிரச்சனைக்குரிய நோய் தொற்றுகள்.
டெங்குவில் "முதல் மூன்று" நாட்கள் அதீத உடல் சூடு இருக்கும். கூடவே கண்களுக்குள் வலி , முதுகுவலி, மூட்டுகளில் கடும் வலி ஏற்படும்.
அபாய அறிகுறிகள்..
உணவு உண்ண இயலாமை, சிறுநீர் அளவில் குறைதல், ஈறுகளில் ரத்தக் கசிவு, மலம் கருப்பாக வெளியேறுதல், கடும் வயிற்று வலி, உடல் முழுவதும் செந்நிறப் படை தோன்றுதல் போன்ற அபாய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் வீட்டில் ஓய்வு எடுப்பது, பிறருக்கு தொற்று பரவாமல் இருக்கவும், ஓய்வு எடுப்பதால் உடல் நலம் குணமாகவும் உதவுகிறது.
தொற்று ஏற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது தொற்றுப் பரவலை தடுக்க உதவுகிறது.
சுய மருத்துவம் / மருந்தக மருத்துவத்தை தவிர்த்து விட்டு மருத்துவரை நேரடியாக சென்று பார்த்து சிகிச்சை பெறுவதே சரியான வழிமுறை.
-டாக்டர் .அ.ப.ஃபரூக் அப்துல்லா