- எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு.
- நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .
"விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்" என பழமொழி இருக்கும்பொழுது மாதக்கணக்கில் மருந்து எடுத்துக் கொள்வது சரியா?
இந்த பழமொழியை கேள்விப்படும் போதெல்லாம் ஒரு அருமையான கதை என் நினைவுக்குவரும். கதையை சொன்னவர், எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நிகழ்ந்த வந்த பரவை முனியம்மா அவர்கள்.
ஒருத்தன் தன் தாயிடம் சென்று "அம்மா என்னை என் மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். போயிட்டு வரட்டுமானு அனுமதி கேட்டான்.
தாயும் சரி என்று சொல்ல... அம்மா எப்போ நான் திரும்பி வர என்று மகன் கேட்க , அதற்கு அந்த தாய் "எப்பொழுது உன் முகம் உனக்கு தெரிகிறதோ அன்று வந்துரு.. அதற்கு மேல் ஒரு நாள் கூட அங்கே தங்க வேண்டாம்"னு சொல்லியனுப்பினாள்.
தாய் என்ன சொன்னாள் என்று புரியாமல் மகனும் மனைவியை அழைத்துக் கொண்டு விருந்துக்கு சென்றான். அங்கே தடல்புடலாய் விருந்து உபசரிப்பு. இலையில் வைக்க இடம் இல்லை, அத்தனை வகைகள். கோழி, முட்டை, மட்டன், மீன் என்று அனைத்தும் பரிமாறப்பட்டன. அவனுக்கு சந்தோஷமோ சந்தோசம்.
2ஆம் நாளும் நல்ல விருந்து, இலையில் எல்லாம் இருந்தது மட்டனை தவிர.
3ஆம் நாள் இலையில் மீன் இல்லை.
4ஆம் நாள் இலையில் கோழி இல்லை.
5ஆம் நாள் இலையில் முட்டையும் இல்லை.
6ஆம் நாள் இலையில் சைவ உணவு சாம்பார் ஒரு கூட்டு,ஒரு பொரியல்.
7ஆம் நாள் இலையே இல்லை, தட்டில் சோறு சாம்பார் உடன் ஒரே ஒரு பொரியல்.
8 ஆம் நாள் சாம்பார் சாதம் மட்டுமே.
இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனும் அதை சாப்பிட்டான். 9 ஆம் நாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. தட்டில் கஞ்சி சோறு, தொட்டுக்க ஊறுகாய்.
பசியில் அதையும் சாப்பிடுவதற்கு தலையை குனிஞ்சா அந்த கஞ்சி தண்ணியில் அவன் முகம் தெரிந்தது. அப்போ தான் அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அவனும் இனிமேல் இங்கே இருந்தா நமக்கு மரியாதை இல்லை என்று உணர்ந்து தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் .
எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு. அதை போல் நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .
-மைதிலி