இந்தியா (National)

திருப்பதி பிரமோற்சவ விழா- தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2024-09-12 05:34 GMT   |   Update On 2024-09-12 05:34 GMT
  • தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
  • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி அக்டோபர் 1-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்குகிறது.

8-ந் தேதி தங்க கருட சேவையும் 12-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம்.

இதனால் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளை ஆந்திர மாநில அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பிலும் எவ்வளவு பஸ்கள் இயக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 67,668 பேர் தரிசனம் செய்தனர். 23,157 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

ரூ.3.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News