செய்திகள்

தைரியம் இருந்தால் மதுரா கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யுங்கள்: உ.பி அரசுக்கு ராஜ்நாத் சிங் சவால்

Published On 2016-06-06 04:17 IST   |   Update On 2016-06-06 04:17:00 IST
தைரியம் இருந்தால் மதுரா கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று உத்திர பிரதேசம் அரசுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை கோர்ட் உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்த மேலும் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனால் இந்த கலவரத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

மதுரா கலவரம் குறித்து அலிகார் நகர கமிஷனர் தலைமையில் அதிகாரம் கொண்ட உயர்மட்ட குழுவின் நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தைரியம் இருந்தால் மதுரா கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று உத்திர பிரதேசம் அரசுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உத்திரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இது ஒன்றும் சதாரண சம்பவம் அல்ல. அரசாங்க நிலத்தை எப்படி 3 ஆயிரம் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருக்க முடியும்.

உண்மையில் இந்த பிரச்சனையின் அடிமட்டத்தை அறிய விரும்பினால் சிபிஐ விசாரணை கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். உத்திர பிரதேச அரசு கோரினால் சிபிஐ விசாரணையை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

உள்துறை மந்திரியாக என்னால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தலையிட முடியாது. மற்றபடி இது போன்ற சம்பவங்கள் திரும்பவும் நடைபெறக் கூடாது.

இவ்வாறு ராஜ்நாத் தெரிவித்தார்.

Similar News