செய்திகள்

தங்க கடத்தல் வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளி யார்?

Published On 2016-06-07 13:12 IST   |   Update On 2016-06-07 13:12:00 IST
தங்க கடத்தல் வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளி யார் என்று ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

வளைகுடா நாடுகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு விமானம் மூலம் தங்க கடத்தல் நடக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015 வரை சுமார் ரூ.600 கோடி அளவுக்கு தங்க கடத்தல் நடந்துள்ளதாக அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு விமான நிலைய ஓடுபாதையில் இருந்து பயணிகளை விமான நிலையத்தின் வெளியே அழைத்து வரும் பஸ்சில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்த 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நவ்ஷாத், பைசல், சலீம், பஷில், யாசீர் இப்னு முகம்மது, சைபுதீன், சபீன் கே.பஷீர், பிபின் சகாரியா, சைனி மோகன்தாஸ் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பைசல் தலைமறைவாகி விட்டார். மற்ற 8 பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது காபிபோசா சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து கைதானவர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்குத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி சங்கரன், அரிபிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது. நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதி சங்கரன், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக கோர்ட்டில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக டெலிபோனில் கூறியதாகவும், எனவே இந்த வழக்கை தொடர்ந்து தன்னால் விசாரிக்க இயலாது என்றும் கூறி வழக்கு விசாரணையில் இருந்து விலகினார். இதேபோல நீதிபதி அரிபிரசாத்தும் வழக்கில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். நீதிபதிகள் விலகியதால் இந்த வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது.

நீதிபதிக்கு ஒருவருக்கு குற்றவாளிகள் லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் கேரள ஐகோர்ட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நீதிபதி சங்கரனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது யார்? என்பது பற்றி கேரள ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த குற்றவாளி நவ்ஷாத் என்பவருக்காகவோ அல்லது பாஸ்போர்ட் அலுவலக முன்னாள் இமிக்ரேசன் அதிகாரியான சபீன் ஜே. பஷீருக்காகவோ நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முன் வந்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் நீதிபதியிடம் காபிபோசா சட்டத்தில் இருந்து இருவரையும் விடுவிக்க முன்பணமாக ரூ.25 லட்சமும், அதற்கு பிறகு அவர் விரும்பும் எதையும் செய்து தருவதாகவும் கூறி உள்ளனர். இந்த தகவல்கள் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தகவல்களை வைத்து அதிகாரிகள் விசாரணையை மேலும் முடுக்கி விட்டுள்ளனர். விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளிடமும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Similar News