செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: காங்கிரஸ் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

Published On 2016-07-26 17:26 IST   |   Update On 2016-07-26 17:26:00 IST
ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தனி நபர் மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை காங்கிரஸ் உறுப்பினர் கொண்டு வந்தார். இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றும்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வலியுறுத்தினர். இதனால் அவையில் இன்று பிற்பகல் கடும் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி நக்வி விமர்சனம் செய்தார். இதுபோன்ற சூழ்நிலையால் அவை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

4 மணிக்கு அவை கூடியபோது, ஆந்திர பிரதேசத்தை எப்படி வளர்ச்சி அடையச் செய்வது? என்பது குறித்து விவாதிக்க தயார் என நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். ஆனால், தனி நபர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தும்படி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் மீண்டும் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் இன்று மாலையில் குழந்தை தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

Similar News