செய்திகள்

சரியாகச் செயலாற்றாத ஊழியர்களுக்கு ஊதியம்- பதவி உயர்வு இல்லை: மத்திய அரசு

Published On 2016-07-26 20:40 IST   |   Update On 2016-07-26 20:40:00 IST
தங்கள் பணிகளில் சரியாகச் செயலாற்றாத ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய மற்றும் பதவி உயர்வு இல்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் சம்பள உயர்வை கடந்த ஜனவரி 1–ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக இன்று மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆகஸ்ட் மாதம் பெறும் சம்பளத்தில் இருந்து உயர்த்தப்பட்ட சம்பள தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெறுவார்கள்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் முக்கியமானது சரியாகச் செயலாற்றாத ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு இல்லை என்பதாகும்.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய முறைப்படி ஊழியர்களின் பணித் திறன் நன்று, மிக நன்று என மதிப்பிடப்பட்டு, அதன்படி ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும். தங்கள் பணிகளை சரிவர செய்யாத ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கப்படாது.

அதேசமயம் தற்போது கடைப்பிடிக்கப்படும் ‘திருத்தப்பட்டு உறுதியளிக்கப்பட்ட பணி முன்னேற்றம்(எம்ஏசிபி)’ செயல்முறைப்படி 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் 20 ஆண்டுகளுக்குள் எம்ஏசிபி இலக்கை எட்டாவிட்டால் அதன்பின்னர் ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்திவைக்கும் பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

Similar News