செய்திகள்

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஒரேநாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி புதிய சாதனை

Published On 2016-09-06 09:54 IST   |   Update On 2016-09-06 09:54:00 IST
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று முகூர்த்தநாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம் நடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் போல புகழ்பெற்றது குருவாயூர் கிருஷ்ணன் கோவிலாகும்.

இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறும். மேலும் குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளும் நடக்கும். இதனால் இந்த கோவிலில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

மேலும் இங்கு பக்தர்கள் தங்கள் எடைக்கு எடை பொருட்களை காணிக்கை கொடுக்கும் துலாபாரம் மிகவும் சிறப்புபெற்றது.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று முகூர்த்தநாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம் நடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கோவில் வளாகமே பொது மக்கள் கூட்டத்தால் திணறியது.

அங்குள்ள திருமண மண்டபங்கள் களைகட்டி இருந்தது. இதனால் குருவாயூர் நகரமே விழாக்கோலம் பூண்டது போல காட்சியளித்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குருவாயூர் கோவிலில் 226 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததுதான் சாதனையாக இருந்தது.

இதேபோல குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் அதிகளவில் நடைபெற்றது. 965 குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் குருவாயூர் கோவிலில் சோறு ஊட்டி மகிழ்ந்தனர்.

Similar News