தமிழகத்தில் இருந்து கடத்தல்: 6 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காஞ்சிரங்குளம் பகுதியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 வாலிபர்கள் பயணம் செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் அருகே உதயாங்குளம் பகுதியை சேர்ந்த அணில்குமார் (வயது 35), சந்தோஷ்குமார் (35) என்பது தெரிய வந்தது.
அவர்களில் போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வருவதாக தெரிவித்தனர். இந்த கஞ்சாவை சிறு பொட்டலங்களாக்கி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், சில்லறை கஞ்சா வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இவர்கள் பின்னணியில் உள்ள கஞ்சா கும்பல் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.