செய்திகள்

ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 நாள் துக்கம் அனுசரிப்பு

Published On 2016-10-18 11:46 GMT   |   Update On 2016-10-18 11:46 GMT
ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்ததையடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மருத்துவக்கல்லூரி துணை வேந்தர் அமித் பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து அவர் மேலும் கூறுகையில், “நடந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.  மீட்பு நெறிமுறைகளைப் பின்பற்றி விரைவாக மீட்பு பணிகளை மேற்கொண்டோம். இல்லாவிட்டால் மேலும் பலர் உயிரிழந்திருப்பார்கள். தீ தடுப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. 9 முதல் 10 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் மூலம் அளிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதால், அவர்களில் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டனர்.

தீ தடுப்பு அதிகாரி உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். ஆதாரத்தை அழித்துவிட்டதாக நாளை யாரும் குற்றம் சுமத்தக்கூடாது. இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதற்கிடையே அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ள நிலையில், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Similar News