செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.10 கோடியை பார்த்ததால் வியாபாரி அதிர்ச்சி

Published On 2016-11-21 10:17 IST   |   Update On 2016-11-21 10:17:00 IST
வங்கி கணக்கில் ரூ.10 கோடியை பார்த்ததால் வியாபாரி அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்னா:

ஜார்க்கணட் மாநிலம் கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்புகுமார் திவாரி. இவர் பான் மசாலா விற்கும் தொழில் செய்து வருகிறார்.

பப்புகுமார் கிரிடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவர் அதில் ரூ.4500 போட்டு வைத்திருந்தார்.

அந்த பணத்தில் ஆயிரம் ரூபாயை எடுக்க அருகில் உள்ள ஏ.டி.எம்.-க்கு சென்றார். ஆனால் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து பணம் எடுக்க வங்கிக்கு சென்றார்.

ஆயிரம் ரூபாய் கேட்டு அவர் எழுதிக் கொடுத்தார். அவர் சேமிப்புக் கணக்கைப் பார்த்த அதிகாரிகள் ரூ.10 கோடி இருப்பு இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

பப்புகுமார் திவாரி மிகவும் சாதாரண பான் மசாலா வியாபாரி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள், “உன் கணக்கில் ரூ.10 கோடி உள்ளதே? இந்த பணத்தை கொடுத்தது யார்?” என்று கேட்டனர்.

இதை கேட்டதும் பப்பு குமார் திவாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். ரூ.10 கோடி எப்படி வந்தது என்ற விபரம் தெரியாது என்றார்.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வந்து பப்புகுமார் திவாரியிடம் விசாரணை நடத்தினார்கள். பப்புகுமாரின் சேமிப்புக் கணக்கும் முடக்கப்பட்டது.

காலையில் இருந்து இரவு 10 மணி வரை நான் பான் மசாலா விற்பேன். அதில் கிடைத்ததைதான் சேமித்து வருகிறேன். திடீரென என் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

அன்றிரவு முழுவதும் நானும் என் குடும்பத்தினரும் தூங்க முடியாமல் தவித்தோம். இந்த பணத்தை என் கணக்கில் போட்டது யார் என்று தெரியவில்லை.

உழைக்காமல் வரும் ஒரு பைசா கூட எனக்கு சொந்த மில்லை. கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடவே நான் விரும்புகிறேன்.

இவ்வாறு பப்புகுமார் திவாரி கூறினார்.

அவர் கணக்கில் ரூ. 10 கோடி செலுத்தியவர் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.

Similar News