செய்திகள்

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டுகளுடன் வந்த ஆசிரியர் கைது

Published On 2016-11-21 12:59 IST   |   Update On 2016-11-21 12:59:00 IST
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குள் வெடிகுண்டுகளுடன் வந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விமான நிலையம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்கள் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வரும் சம்பவம் அதிகரிப்பதால் இங்கு பயணிகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

திருவனந்தபுரம் அருகே சிறையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் ஷாஜிமோன் (வயது 43). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்திருந்த சூட்கேசை ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டுகள் சிக்கியது பற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று அந்த 3 வெடிகுண்டுகளையும் கைப்பற்றினார்கள். அப்போது அதில் ஒரு வெடிகுண்டு செயல் இழந்த நிலையில் இருந்ததும் மற்ற 2 குண்டுகளும் வெடிக்கும் நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக அந்த வெடிகுண்டுகள் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டது. மேலும் ஆசிரியர் ஷாஜிமோன் கைது செய்யப்பட்டார். அவரை திருவனந்தபுரம் சென்ட்ரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் வெடிகுண்டுகளை எதற்காக விமான நிலையத்திற்கு கொண்டு வந்தார்? அவருக்கு வெடி குண்டுகள் எப்படி கிடைத்தது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News