செய்திகள்

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் - பிரதமர் மோடி திட்டம்

Published On 2016-11-21 14:10 IST   |   Update On 2016-11-21 14:10:00 IST
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
புதுடெல்லி:

நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் அதிக அளவில் நிதி செலவாகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் தடைகள் ஏற்படுகின்றன.

எனவே, பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அது குறித்து பொது விவாதம் தேவை என பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பாராளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில கட்சிகள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின.

பிரதமர் மோடியின் இந்த கருத்தை சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்கு தேர்தல் கமி‌ஷனும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் 9 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். மேலும் சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைப்பது அல்லது அதிகப்படுத்துவது குறித்து சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.

இதற்கிடையே, பாராளுமன்றம் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிக அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு எந்திரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த எந்திரங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இதனால் கூடுதல் செலவாகும். மேலும் எந்திரங்களை பாதுகாப்புடன் வைக்க பண்டக சாலைகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். இதனால் கூடுதல் செலவாகும் என்ற கருத்தும் நிலவுகிறது.

Similar News