செய்திகள்

கேரள காங்கிரசார் கன்றுக்குட்டியை வெட்டியதை கண்டித்து டெல்லியில் பா.ஜனதா இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-31 02:09 IST   |   Update On 2017-05-31 02:09:00 IST
கேரளாவில் காங்கிரசார் கன்றுக்குட்டியை வெட்டி இறைச்சி வழங்கியதை கண்டித்து டெல்லியில் பா.ஜனதா இளைஞர் அணியினர் காங்கிரஸ் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
புதுடெல்லி:

கேரளாவில் காங்கிரசார் கன்றுக்குட்டியை வெட்டி இறைச்சி வழங்கியதை கண்டித்து டெல்லியில் பா.ஜனதா இளைஞர் அணியினர் காங்கிரஸ் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது சோனியா, ராகுல்காந்தி உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.

அப்போது, கன்றுக்குட்டி ஒன்றை பொது இடத்தில் வைத்து வெட்டி அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு இளைஞர் காங்கிரசார் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வன்மையாக கண்டித்தார்.



கேரள இளைஞர் காங்கிரசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் பா.ஜனதா இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை பா.ஜனதாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாஜ்மான்சிங் ஓட்டல் அருகே திரண்டனர். அங்கு ஒரு கன்றுக்குட்டியை நிறுத்தி வைத்து அதை வணங்கினர். பின்னர் அக்பர் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது கன்றுக்குட்டியை வெட்டிய விவகாரத்தில் சோனியா காந்தியும், இளைஞர் காங்கிரஸ் தலைவர்களும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். கபுர்தலா அவுஸ் பகுதியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரின் தடுப்பு அரணை தகர்த்துவிட்டு தங்களுடைய ஊர்வலத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

இதையடுத்து சற்று தொலைவில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த இன்னொரு தடுப்பு அரண் பகுதியில் பா.ஜனதா இளைஞர் அணியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதையும் மீறி செல்ல முயற்சித்ததால் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

அப்போது சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளையும் அவர்கள் எரித்தனர். மேலும் அப்பகுதியில் சோனியா, ராகுல்காந்தி புகைப்படங்களுடன் அச்சிட்டு ஒட்டிப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீது கருப்பு மையும் பூசினர். 

Similar News