செய்திகள்

கம்யூ. கட்சியினர் மாட்டு கறி விருந்து நிகழ்ச்சியை டெல்லியில் நடத்த தயாரா?: கேரள பா.ஜனதா தலைவர் சவால்

Published On 2017-05-31 11:34 IST   |   Update On 2017-05-31 11:34:00 IST
கேரளாவில் மாட்டு கறி விருந்து நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர், இதனை டெல்லியில் நடத்த முடியுமா? என்று பாரதிய ஜனதா தலைவர் கும்மணம் ராஜசேகரன் சவால் விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:

மத்திய அரசு சந்தையில் மாடுகளை இறைச்சிக்காக விற்க கூடாது என அறிவித்துள்ளது.

இதற்கு கேரளா மற்றும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போல காங்கிரஸ் கட்சியினரும் ஆங்காங்கே மாட்டு கறி விருந்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கேரளாவின் பல பகுதிகளில் மாட்டு கறி விருந்து போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டத்திற்கு மாநில பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. இது கால்நடைகளை பராமரிக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்ட திட்டமென கூறியது.

இது தொடர்பாக கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் கும்மணம் ராஜசேகரன் நேற்று கொச்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

கேரளாவில் மாட்டு கறி விருந்து நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர், இதனை டெல்லியில் நடத்த முடியுமா? இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் ஆகியோர் டெல்லியில் அவர்கள் கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி. பவன் முன்பு இந்த போராட்டத்தை நடத்துவார்களா? அதற்கான தைரியம் இருக்கிறதா?

கேரளாவில் மட்டும்தான் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள். வேறு இடங்களில் அவர்களால் நடத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கும்மணம் ராஜசேகரன் கருத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கம்யூனிஸ்டுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Similar News