செய்திகள்

ஏரிகளில் கழிவுகளை கொட்டும் தொழிற்சாலைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: பசுமை தீர்ப்பாயம் கேள்வி

Published On 2017-05-31 14:56 IST   |   Update On 2017-05-31 14:56:00 IST
ஏரிகளில் கழிவுகளை கொட்டும், அசுத்தப்படுத்தும் தொழிற்சாலைகளை அகற்ற அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி:

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ளது பெல்லண்டூர் ஏரி. இந்த ஏரியில் உள்ள தண்ணீரில் நுரை போன்ற படலம் உருவாக ஆரம்பித்தது. ஏரியை சுற்றிலும் உள்ள ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலப்பதால இந்த பிரச்சனை ஏற்படுகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

கடந்த 24-ம் தேதி மாசுபாட்டை ஏற்படுத்தும் பெல்லண்டூர் ஏரியை சுற்றியுள்ள 76 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி சுவன்ந்தர் குமார் துணை கமிஷனர் மற்றும் அதிகாரிகளுக்கு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதிமற்றும் மின்சார வசதியை துண்டிக்குமாறு அறிவுறுத்தினார்.



இதனிடையே, தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு எதிராக அதன் உரிமையாளர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது, தொழிற்சாலைகளை மூடும் உத்தரவை திரும்ப பெற முடியாது என்று கூறியதோடு, ஏரிகளை அசுத்தப்படுத்தும் தொழிற்சாலைகளை அகற்ற அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.

மேலும், “நீங்கள் மக்களுக்கு மிகுந்த தொந்தரவு அளிக்கிறீர்கள். உங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுபாட்டினால் மூச்சுத் திணறல் மற்றும் மரணங்கள் ஏற்படுகின்றன” என்றார்.

Similar News