செய்திகள்

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதற்கு இந்தியா கடும் கண்டனம்

Published On 2017-08-19 06:16 IST   |   Update On 2017-08-19 06:16:00 IST
காஷ்மீரில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதற்கு இந்தியா அதிகாரபூர்வமாக தனது கண்டனத்தை தெரிவித்தது.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பாங்கோன் என்னும் ஏரி உள்ளது. இங்கு, இந்தியா-சீனா நாடுகளுக்கு பொதுவாக உள்ள அசல் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்தியா எல்லைக்குள் கடந்த 15-ந்தேதி காலை சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர்.

இதற்கு பாதுகாப்பு படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சீன ராணுவத்தினர் பின்வாங்கினர். தங்களது எல்லைக்குள் திரும்பியதும் இந்திய-திபெத் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் இதேபோல் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் இந்திய அரசு நேற்று முதல்முறையாக தனது அதிகாரபூர்வ கண்டனத்தை தெரிவித்தது. இதுபற்றி நிருபர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், லடாக் சம்பவத்தை உறுதி செய்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இரு நாடுகளின் எல்லையிலும் அமைதி பராமரிக்கப்படவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள்(ஊடுருவல்கள்) இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்தது அல்ல. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் கடந்த 15, 16-ந்தேதிகளில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்” என்றனர்.

சிக்கிம் எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்துள்ள பதற்றமான நிலையில் காஷ்மீருக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதை இந்தியா வன்மையாக கண்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News