செய்திகள்

தர்மயுத்தம் என்ற பெயரில் பதவி கேட்டு மிரட்டுகிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம் அணி மீது தினகரன் ஆதரவாளர் பாய்ச்சல்

Published On 2017-08-19 16:46 IST   |   Update On 2017-08-19 16:46:00 IST
தர்மயுத்தம் என்று சொல்லி மக்களையும், தொண்டர்களையும் குழப்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி மீது தினகரன் ஆதரவாளர் குற்றம் சாட்டினார்.

பெங்களூரு:

பெங்களுரு சிறையில் நேற்று சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். அப்போது தினகரனுடன் சென்ற வாணியம்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் பாலசுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தர்மயுத்தம் என்ற பெயரில் கட்சி பதவிகளை கேட்கிறார்கள். ஆட்சியில் அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் பதவிகள் கேட்கிறார்கள். நிதித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்த்துறை உள்ளிட்ட வளமான துறைகளை கேட்கிறார்கள். கே.பி. முனுசாமி வாரியத் தலைவர் பதவி கேட்கிறார்.

மதுரை எம்.எல்.ஏ. சரவணன் அமைச்சர் பதவி வாங்கி தரவேண்டும் என்று கேட்டார். அது முடியாது என்பதால் அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து விட்டார்.

இதுபோல முன்னாள் அமைச்சர்கள் பலர் வாரியத் தலைவர் பதவியும், கட்சியில் பொறுப்பும் கேட்கிறார்கள். ஆனால், அதிக பதவிகள் தரமுடியாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஜெயலலிதா இருந்தபோது யார்? யார்? என்ன பதவியில் இருந்தார்களோ? அதை மட்டும் தான் தரமுடியும் என்று கூறுகிறார். இதனால் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். ஆனால், வெளி உலகத்தில் தர்மயுத்தம் என்று சொல்லி மக்களையும், தொண்டர்களையும் குழப்புகிறார்கள்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த கூட்டம் தினகரன் பின்னால் தொண்டர்கள் இருப்பதை உணர்த்தி விட்டது.


அவர் தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் எழுச்சியை பெறும். தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும். அப்போது தினகரன் யார் என்பது அவர்களுக்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News