செய்திகள்

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2017-08-19 23:18 IST   |   Update On 2017-08-19 23:18:00 IST
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய நாளை அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் 25-ம் தேதி வரை அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்ய வேண்டும். ரூ.20 லட்சத்துக்குக் கீழே வியாபாரம் செய்பவர்களும், விருப்பப்பட்டால் ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யலாம்.

ஆனால், ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்த ஒவ்வொருவரும் அவர்களுடைய விற்பனை மற்றும் கொள்முதல் பற்றிய விவரங்களை மாதாமாதம் உரியத் தேதியில் சமர்ப்பிக்க வேண்டும். வலைதளத்தில், ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ படிவம் மூலம், கணக்கு தாக்கல் செய்யலாம்.



ஜூலை மாதத்திற்கு ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 20-ம் தேதி(நாளை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய நாளை அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் 5 நாட்களுக்கு அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது. இதனால் வரும் 25-ம் தேதி வரை கணக்கு தாக்கல் செய்யலாம்.

Similar News