செய்திகள்

கோர்ட்டை மீன் மார்க்கெட் ஆக்கி விடாதீர்கள்: வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

Published On 2018-02-06 07:11 IST   |   Update On 2018-02-06 07:11:00 IST
நீதிபதி லோயா மரண வழக்கில் ஏற்பட்ட விவாதத்தை அடுத்து கோர்ட்டை மீன் மார்க்கெட் அளவுக்கு இறக்கி விடாதீர்கள் என வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

பா.ஜனதா தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டிருந்த சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி லோயா, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மராட்டிய பத்திரிகையாளர் லோன், பூனவாலா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, லோன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பல்லவ் சிசோடியா, சமீபத்தில் நீதிபதிகள் பேட்டி அளித்த சம்பவத்தால், இவர்கள் விசாரணை நடத்தினாலும் சந்தேகம் எழும் என்று கூறினார்.

அதற்கு மும்பை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் விசாரணையை விரும்பாவிட்டால், பிறகு எதற்கு மனு தாக்கல் செய்தீர்கள்? என்று கேட்டார். அப்போது இருவரும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.



உடனே நீதிபதி சந்திரசூட் தலையிட்டு, “கோர்ட்டு விவாதத்தை மீன் மார்க்கெட் அளவுக்கு இறக்கி விடாதீர்கள். ஒரு நீதிபதியை கத்தி கூச்சலிட்டு அடக்க முடியாது. நான் சொல்வதை கேளுங்கள்” என்று கூறினார்.

அதற்கு துஷ்யந்த் தவே, “கேட்க மாட்டேன். சிசோடியா ஆஜராவதை நீங்கள் தடுத்திருக்க வேண்டும். உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லுங்கள்” என்றார். அதற்கு நீதிபதி சந்திரசூட், “மனசாட்சி பற்றி எங்களுக்கு பாடம் கற்பிக்காதீர்கள்” என்று கூறினார். 

Similar News