செய்திகள்
கணவன்-மனைவி சேர்ந்து தோண்டிய கிணறு

ஊரடங்கு காலத்தில் உருப்படியான காரியம் செய்த மகாராஷ்டிர தம்பதி

Published On 2020-04-21 15:46 IST   |   Update On 2020-04-21 15:46:00 IST
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் ஊரடங்கு காலத்தில் சோர்ந்து இருக்காமல் உருப்படியான ஒரு பணியை செய்துள்ளனர்.
வாஷிம்:

ஊரடங்கால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி, பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் தினக்கூலி தொழிலாளர்கள் வரை வேலை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். வருமானம் இல்லாத நிலையிலும், ஊரடங்கு காலத்தை சிலர் மிகவும் பயனுள்ளதாக மாற்றுகின்றனர். 

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கஜானன் மற்றும் அவரது மனைவி இணைந்து, 21 நாட்கள் கடுமையாக உழைத்து கிணறு தோண்டி உள்ளனர்.  வாஷிம் மாவட்டம் கார்கேடா கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, ஊரடங்கு காலத்தில் உருப்படியான இந்த வேலையை செய்ததை பெருமையாக கூறுகின்றனர்.



இதுபற்றி கஜானன் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெளியில் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், ஏதாவது செய்ய வேண்டும் என நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். அதன்படி வீட்டு வளாகத்தில் கிணறு தோண்ட முடிவு செய்து, பூஜைகள் செய்து வேலையைத் தொடங்கினோம். 

இதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எங்களை கிண்டல் செய்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கிணறு தோண்டும் பணியை தொடர்ந்து செய்தோம். 21-வது நாளில் 25 அடி ஆழம் தோண்டியபோது ஊற்று வெளிப்பட்டு தண்ணீர் பெருக ஆரம்பித்தது” என்றார்.

Similar News