இந்தியா

முன்விரோதத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

Published On 2025-01-17 14:27 IST   |   Update On 2025-01-17 14:27:00 IST
  • வேணுவின் வீட்டுக்குள் ரிது ஜெயன் இருப்பு கம்பியுடன் புகுந்தார்.
  • ரிது ஜெயன் மீது 2 போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சேர்ந்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது65). இவரது மனைவி உஷா(60). இவர்களது மகன் ஜிதன், மருமகள் வினீஷா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் வேணுவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்துவந்த ரிது ஜெயன்(28) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு தகராறு நடந்தது. அது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.

இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக் கிடையே நேற்று இரவும் தகராறு நடந்தது. அப்போது வேணுவின் வீட்டுக்குள் ரிது ஜெயன் இருப்பு கம்பியுடன் புகுந்தார்.

பின்பு அங்கிருந்த வேணு, அவரது மனைவி உஷா, மகன் ஜிதின், மருமகள் வினீஷா ஆகிய 4 பேரையும் இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்தார். இதனால் அவர்கள் 4 பேரும் வலி தாங்க முடியாமல் அலறினர். அதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வேணு உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேணு, அவரது மனைவி உஷா, மருமகள் வினீஷா ஆகிய 3 பேரும் இறந்து விட்டனர்.

வேணுவின் மகன் ஜிதின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் வேணு குடும்பத்தினர் மீது வெறித் தாக்குதல் நடத்திய ரிது ஜெயன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

ரிது ஜெயன் மீது 2 போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இருக்கிறார். இந்தநிலையில் 3 பேர் கொலை வழக்கிலும் தற்போது சிக்கியிருக்கிறார். முன்விரோதத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News