மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு: கெஜ்ரிவால் விமர்சனம்
- பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், கெஜ்ரிவால் சிறப்பாக செய்கிறார் என்பதுதான்.
- எங்களுடைய தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளில் பாஜக போட்டியிட விரும்புகிறது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் முதற்பகுதியை வெளியிட்டார். அதில் கர்ப்பிணி பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு 2500 ரூபாய், மூத்த குடிமக்களுக்கு பென்சன், வயது முதிர்ந்தவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன.
இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையின்படி, டெல்லியில் செயல்பட்டு வரும் மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படும் என விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலின் அனைத்து திட்டங்களும் தொடரும் என நட்டா தற்போது தெரிவித்துள்ளார். இது அவர்களுடைய தேர்தல் அறிக்கை எனச் சொல்கிறார். பிரதமர் மோடியும் அவருடைய விளம்பரங்களில் இதையே கூறியுள்ளார்.
மொஹல்லா கிளினிக்குகள் டெல்லியில் மூடப்படும் என ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இன்று நாங்கள் டெல்லி முழுவதும் சென்று, மொஹல்லா கிளினிக்குகளை விரும்புகிறீர்களா? இல்லையா? என கேட்க இருக்கிறோம்.
மொஹல்லா கிளினிக்குகளை ஆதரிப்பவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். மொஹல்லா கிளினிக்குகள் இடிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் பாஜக-வுக்கு வாக்களியுங்கள். கெஜ்ரிவால் செய்யும் அனைத்தையும் அவர்களே செய்ய வேண்டியிருந்தால், ஏன் பாஜகவை கொண்டு வர வேண்டும்? கெஜ்ரிவாலின் வேலையை கெஜ்ரிவால் சிறப்பாகச் செய்வார், ஏனென்றால் அவருக்கு அது தெரியும். இதை மக்களிடம் கேட்க இருக்கிறோம்.
பொதுமக்கள் கூட, கெஜ்ரிவால் செய்ததை நீங்கள் செய்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்களை ஏன் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்கிறார்கள்.
பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், கெஜ்ரிவால் சிறப்பாக செய்கிறார். அவரது பணியை பாஜக பாராட்டுகிறது என்பதுதான்.
எங்களுடைய தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளில் பாஜக போட்டியிட விரும்புகிறது. இதைவிட துரதிருஷ்டம் என்னவாக இருக்க முடியும்?. இதைவிட மோசமான பார்வை கொண்ட கட்சியை எனது வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது. அவர்களுக்கு டெல்லி குறித்து சிந்தனை, பார்வை, திட்டம் கிடையாது.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.