VIDEO: மகா கும்பமேளாவில் நிருபரை தாக்கிய முள் பாபா..முட்கள் உண்மையானதா? எனக் கேட்டதால் ஆத்திரம்
- எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார்
- அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலவகைப்பட்ட ஆன்மீக குருக்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் அசாதாரண செயல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அப்படியொரு செயலைப் பற்றி கேள்வி கேட்கப்போய் பத்திரிகையாளர் ஒருவர் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முள் பாபா என்று அறியப்படும் காண்டே வாலே பாபா கும்பமேளாவில் எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார். மேலும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக முட்களில்தான் படுத்திருப்பதாக கூறிக்கொண்டார்.
முள் பாபாவை நெருங்கிய செய்தி நிருபர் ஒருவர், இந்த முட்கள் உண்மையானதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முள் பாபா, அங்கிருந்து எழுந்து அந்த நிருபரை நெருங்கி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.
"வா வந்து இதில் நீயே படுத்து, முட்கள் உண்மையா? இல்லையா? எனக் கண்டுபிடி" என்று அந்த நிருபரை ஒரு வழி செய்துள்ளார் முள் பாபா. ஆளை விட்டால் போதும் என அந்த நிருபர் அங்கிருந்து நழுவினார். இத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.