திடீரென ரத்தக் களறியாக மாறிய நீரோடை.. அர்ஜென்டினா மக்கள் அதிர்ச்சி - காரணம் இதுதான்!
- தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே உள்ளது.
- இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.
அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது.
அர்ஜென்டினாவிற்கும் உருகுவேவிற்கும் இடையிலான ஒரு முக்கிய நீர்நிலையான ரியோ டி லா பிளாட்டா நதியின் துணை நதியான இது பல கிலோமீட்டர் தூரம் பயணித்து கடைசியில் ஆற்றில் கலக்கும். பயணிக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.
அங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதற்கு முன்னரும் எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்திலும் இந்த நீர்நிலை மாறியுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஓடை நிறம் மாறியது குறித்து பேசிய உள்ளுரர்வாசிகள், திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல நீரோடை நிறம் மாறியிருந்தது. அது இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர்.
இந்த நீரோடையை தவிர்த்து இந்தப் பகுதியில் உள்ள ஆறுகள் பலவும் மாசுபாடுகள் நிறைந்தவை. உதாரணமாக மடான்சா-ரியாசுலோ நதிப் படுகை, லத்தீன் அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.