தெலுங்கானா கோர்ட்டில் நீதிபதி மீது செருப்பு வீச்சு- ஆயுள் தண்டனை வழங்கியதால் கைதி ஆத்திரம்
- கைதி நீதிபதியிடம் பேச விரும்புவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் கைவிலங்கை கழற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
- கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கைதிக்கு பெண் நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஜெகத்கிரி குட்டா பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக கைதியை எல்.பி. நகர், ரங்கா ரெட்டி, 9-வது கூடுதல் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கு விசாரணை முடிந்து கைதியை செல்ல பள்ளி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் நர்சிங்கி போலீசார் அதே கைதியை கொலை வழக்கு சம்பந்தமாக நேற்று அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கைதிக்கு பெண் நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
அப்போது கைதி நீதிபதியிடம் பேச விரும்புவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் கைவிலங்கை கழற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
போலீசார் கைவிலங்கை கழற்றி விட்டனர். அப்போது கைதி பெண் நீதிபதியை திட்டி விட்டு காலில் இருந்த செருப்பை கழற்றி நீதிபதி மீது வீசினார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த வக்கீல்கள் கைதியை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். அவரை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கைதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் கோாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.