மும்மொழி கொள்கை.. மகாராஷ்டிராவில் மராத்திக்குத் தான் முக்கியத்துவம் - பா.ஜ.க. திட்டவட்டம்
- மராத்தியில் பேச வேண்டும் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது?
- மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமானதா?
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்த சம்பவம் அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
வைரல் வீடியோவில்,பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் ஏர்டெல் ஸ்டோரில் பணியாற்றும் பெண் ஒருவர் மராத்தி மொழி பேச மறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் அந்த ஊழியர், "நான் ஏன் மராத்தி மொழியில் பேச வேண்டும்? மகாராஷ்டிராவில் மராத்தியில் பேச வேண்டும் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது? என்னிடம் முறையாக பேசுங்கள்."
"நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும்? நீங்கள் தான் மகாராஷ்டிராவை வாங்கியுள்ளீர்களா? மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமானதா, நான் எங்கு வேலை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நீங்கள் எனக்கு கூறுகின்றீர்களா? பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை, மீறி செய்தால் நான் காவல் துறையை தொடர்பு கொள்வேன்," என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த வாடிக்கையாளர், "நீங்கள் என் பிரச்சனையை தீர்க்கவில்லை, மேலும் என்னிடம் சரியாகவும் பேச மறுக்கின்றீர்கள்," என்று கூறியுள்ளார். ஏர்டெல் ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் இடையே மொழி விவகாரம் குறித்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ளூர் மொழியை ஊக்குவிப்பது அவசியம் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சித்ரா வாக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மகளிர் அணி தலைவராகவும் இருக்கும் சித்ரா வாக், " ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால், அவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை தெரியவில்லை எனில், அவர்கள் அதனை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அல்லது மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.