எபிக் விவகாரம்: குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்கவும்- மாநிலங்களவை தலைவருக்கு டி.எம்.சி. எம்.பி.க்கள் வேண்டுகோள்
- மேற்கு வங்க வாக்காளர் அட்டையில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் அட்டையில் இடம் பெற்றுள்ளது.
- இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு, போலி வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதுடன், வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} தொடர்பாக குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் உங்களுடைய பரிந்துரை மிகவும் சிறந்த பரிந்துரை. இது தொடர்பாக நான் பரிசீலனை செய்வேன் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுவேந்து சேகர் ராய் "மாநிலங்களவையில் 267 விதியின் கீழ் வழங்கப்படும் நோட்டீஸ் 176 ஆவது விதியின் கீழ் மாற்றப்படுவதற்கான முன் நிகழ்வுகள் நடந்தள்ளது. இதனால் 267 விதியின் கீழ் உள்ள நோட்டீஸை 176 விதியின் கீழ் உங்களுடைய விருப்ப அதிகாரத்தை பயன்படுத்தி குறுகிய கால விவாத்திற்கு அனுமிக்க வேண்டுகோள் வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஜெகதீப் தன்கர் "எம்.பி.யின் திறமையை பாராட்டுகிறேன். சிறந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். இதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன்" என்றார்.
மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பர், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் இடம் பிடித்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எபிக் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.