வெற்று அரசியலமைப்பு- மிகப்பெரிய மோசடி: மாநிலங்களவையில் ராகுல் காந்தியை டார்கெட் செய்த அமித் ஷா
- காங்கிரஸ் 77 முறை அரசியலமைப்பைத் திருத்தியது. பாஜக 22 முறை மட்டுமே அதை செய்துள்ளது.
- நீங்கள் ஒரு போலியான, வெற்று அரசியலமைப்பை எடுத்துச் செல்கிறீர்கள் என்று மக்கள் கண்டுபிடித்தார்கள்.
அரசியலமைப்பு நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை நினைவுகூறும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மக்களவையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை விவாதம் நடைபெற்றது.
நேற்றும் இன்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது மாநிலங்களவையில் அமித் ஷா பேசினார்.
அப்போது அமித் ஷா "மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு, ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் செய்ததுபோல் யாரும் அதை சிதைக்கவில்லை.
நீங்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) ஒரு போலியான, வெற்று அரசியலமைப்பை எடுத்துச் செல்கிறீர்கள் என்று மக்கள் கண்டுபிடித்தார்கள், அதனால்தான் நீங்கள் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்தீர்கள்.
நாங்கள் மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை ஏற்றுக்கொண்டோம், ஆனால் எங்கள் மரபுகளில் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை.
மாற்றம் என்பது வாழ்க்கையின் உண்மையும் மந்திரமும் ஆகும். அரசியலமைப்பை உருவாக்கியவர்களும் இதை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.
காங்கிரஸ் 77 முறை அரசியலமைப்பைத் திருத்தியது. பாஜக 22 முறை மட்டுமே அதை செய்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் முதன்முறையாக ஜூன் 18, 1951 அன்று திருத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி பொதுத் தேர்தல்களுக்காகக் காத்திருக்க விரும்பாததால் அரசியலமைப்புச் சட்டக் குழு இந்தத் திருத்தத்தைச் செய்தது. கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசியலமைப்பில் பிரிவு 19A சேர்க்கப்பட்டது.
சமத்துவம் நமது அரசியலமைப்பின் இதயமாக உள்ளது. ஏன் ஒரு பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை? ஏனென்றால் முதல் பிரதமர் முஸ்லிம் தனிநபர் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஒரே நாளில் இரண்டு தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. மகாராஷ்டிராவில் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) தேர்தலில் தோல்வியடைந்தபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாகக் கூறினர், ஜார்க்கண்டில் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபோது, நல்ல ஆடைகளை அணிந்து பதவி ஏற்றுக் கொண்டனர். கொஞ்சம் வெட்கப்படுங்கள்... மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் 3 குற்றவியல் நீதிச் சட்டங்களைக் கொண்டு வந்தோம். இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி குற்றவியல் நீதி அமைப்பை இந்தியமயமாக்கினார். அடிமைத்தன மனநிலையிலிருந்து நாட்டை விடுவிக்க யாராவது பாடுபட்டால் அது பிரதமர் மோடிதான்" என்றார்.