அமிர்தசரஸ் கோவிலில் குண்டுவீசிய குற்றவாளி சுட்டுக்கொலை
- சந்தேகத்துக்குரிய 2 நபர்களை போலீசார் கண்காணித்தனர்.
- போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் கண்ட்வாலா பகுதியில் தாகூர் துவாரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென கோவில் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் சுவரின் ஒரு பகுதி சேதமானது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அமிர்த சரஸ் கோவில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேகத்துக்குரிய 2 நபர்களை போலீசார் கண்காணித்தனர். ராஜ சான்சி பகுதியில் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலைமை காவலர் குர்பிரீத் சிங்குக்கு காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக சுட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் காயம் அடைந்தார். அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.