null
மிகப் பெரிய கலவரம் என்று மிகைப்படுத்துகிறார்கள்.. 2000 பேர் உயிரிழந்த குஜராத் கலவரம் பற்றி மோடி ஓபன் டாக்
- நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து, நாங்கள் முற்றிலும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தன
- நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
2002 குஜராத் கலவரத்தில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றமே அறிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று அமெரிக்க பிரபலம் லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடன் பிரதமர் மோடி பங்கேற்ற 3 மணி நேர பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்று வெளியானது.
அதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி மனம் திறந்தார். இந்நிலையில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு முஸ்லீம் - இந்து சமூகங்களுக்கு இடையே 2002 இல் கலவரம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதில் தன்னை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பாட்காஸ்ட்டில் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, எங்காவது ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்தது. பட்டம் பறக்கும் போட்டிகள் அல்லது சைக்கிள் மோதிக்கொள்வது போன்ற அற்ப விஷயங்களால் வகுப்புவாத வன்முறை வெடிக்கும். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்ததது. அதுதான் வன்முறையின் தொடக்கப் புள்ளி.
இது கற்பனை செய்ய முடியாத அளவிலான ஒரு சோகம். மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். ஆனால் அதன் பின் நடந்த கலவரங்கள்தான் 'இதுவரை நடந்ததிலேயே மிகப் பெரிய கலவரம்' என போலி பிரசாரம் செய்யப்படட்டது. 2002 க்கு முந்தைய தரவுகளை நீங்கள் மதிப்பாய்வு செய்தால், குஜராத் அடிக்கடி கலவரங்களை எதிர்கொண்டதை நீங்கள் காண்பீர்கள். கோத்ராவுக்கு முன்னரே குஜராத்தில் 250 கலவரங்கள் நடந்திருக்கின்றன.
அந்த நேரத்தில் மத்தியில் எங்கள் அரசியல் எதிரிகள் ஆட்சியிலிருந்தனர். அவர்கள் எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்க வேண்டுமென்று நினைத்தனர்.
அதற்காக அவர்கள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளைக் கடந்தும், நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து, நாங்கள் முற்றிலும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தன. உண்மையான குற்றவாளிகள் நீதியை எதிர்கொண்டனர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வன்முறையைச் சந்தித்து வந்த குஜராத்தில், 2002 முதல் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்று தெரிவித்தார்.
குஜராத் கலவரம் :
2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவா அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
மோடி அரசும், காவல்துறையுமே இதற்கு முக்கிய பொறுப்பு என அவ்வமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்க்கிடேயே 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரெயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், கோத்ராவில் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உறுதி செய்தது.
இந்த கலவரத்தை குஜராத் முதல்வராக இருந்த மோடி கையாண்ட விதம், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த 2023 ஆம் ஆண்டு பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.