ஊடகங்களை நேருக்கு நேர் சந்திக்க அச்சம் கொண்டவர் - பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்
- அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
- பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
அமெரிக்க பாட்காஸ்டருன் பிரதமர் மோடியின் உரையாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடும் வீடியோவில் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை, ஆனால் அவருக்கு அமெரிக்க பாட்காஸ்டருடன் உரையாடுவது பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் வீடியோ குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "ஊடகத்துறையை சேர்ந்தவர்களை செய்தியாளர் சந்திப்பில் சந்திக்க பயப்படும் நபர், வெளிநாட்டு பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
"பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள பயம் கொண்டுள்ளவர், வலதுசாரி அமைப்பில் நங்கூரமிட்டுள்ள ஒரு வெளிநாட்டு பாட்காஸ்டரிடம் ஆறுதல் கண்டுள்ளார். மேலும், தனது அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் திட்டமிட்டு அழித்து, சமீபத்திய வரலாற்றில் வேறு யாரும் எதிர்க்காத அளவுக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் விமர்சகர்களைத் துரத்தி செல்லும் அவர், விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று சொல்லத் துணிந்துள்ளார்!," என்று குறிப்பிட்டுள்ளார்.