பெங்களூருவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்- தென்ஆப்பிரிக்கா பெண்கள் கைது
- மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ 870 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மங்களூருவில் சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த போதைப்பொருள் விற்பனையாளர்களான வெளிநாட்டு பெண்கள் 2 பேரை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி நீலாத்ரி நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வெளிநாட்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அபிகைல் அடோனிஷ் (வயது 30), பாம்பா பேன்டா (31) என்பதும், அவர்கள் டெல்லியில் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ 870 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் மங்களூருவுக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இது மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு' என்றார்.